Friday, November 16, 2012

பீதியைக் கிளப்பிய மழை




நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நடந்த சம்பவம் இது.பழைய வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தோம். பழையவீடு கூரை மற்றும் ஓடுகளைக் கொண்டு மண் சுவரால் கட்டப்பட்டது. பழைய வீட்டில் இருந்த மின்இணைப்பை துண்டிக்கச் சொல்லி மின்வாரியத்தைக் கோரியிருந்தோம். மின் இணைப்பைத்துண்டிப்பதில் சிறிது தாமதம் ஏற்படவே அனைத்து சுவர்களும் இடிக்கப்பட்டுவிட்ட நிலையில்> சுவரில்மின் இணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்த இடம் மட்டும் இடிக்கப்படாமல் விட்டுவைக்கப்பட்டிருந்தது. காலி மனையில் இரண்டு அடி அகல மண் சுவர் மட்டும் மின் இணைப்போடு நின்று கொண்டிருந்தது. அன்று இரவு திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் வெளுத்துக் கட்டிய மழை எங்களை மிகுந்த பீதியில் ஆழ்த்தியது. இடிக்காமல் விட்டு வைத்திருந்த மண் சுவர் மழையில் கரைந்து கீழே விழுந்து விட்டால் மின் வயர்கள் அறுந்து தெருவில் பெருக்கெடுத்தோடும் வெள்ள நீரில் மின்சாரம் பாய்ந்து ஏதேனும் விபரீதம் ஏற்பட்டுவிடுமே என்று அஞ்சினோம். மின்வாரியத்திற்கு போன் செய்து புகார் செய்யவும் இயலவில்லை. மழை சிறிதுநேரத்தில் விட்டுவிடும் என்று நம்பிக்கொண்டிருந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொடர்ந்து பெய்த மழையால் எங்களது இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையத் தொடங்கியபோதுதான் இயல்பு நிலைக்கே திரும்பினோம். நல்ல வேளையாக எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை. காலையில் சென்று பார்த்தபோது அந்த மண் சுவர் ஈரத்தில் உருகி நின்றது. இன்னும் பத்து நிமிடம் மழை தொடர்ந்திருந்தால் கூட நாங்கள் அஞ்சிய அந்தஅசம்பாவிதம் நடந்திருக்கும் போலும். நல்ல வேளையாக ஏதும் நடக்கவில்லை.

நன்றி: புதியதலைமுறை 22-11-2012

Thursday, December 29, 2011

கட்ஜீ ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்..?

இருபது ஆண்டுகள் வழக்கறிஞராகவும், இருபது ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றிய மார்க்கண்டேய கட்ஜீ பிரஸ் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, இந்திய ஊடகங்களைப் பற்றி அவர் கூறிய கருத்துகள் பத்திரிக்கை உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. .என்.எஸ் போன்ற அமைப்புகளும், சில பத்திரிக்கையாளர்களும் கட்ஜீவின் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், தனது கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளனர். இந்த விவகாரத்தில் கட்ஜீ மன்னிப்பு கேட்க மறுத்துள்ளார். மன்னிப்பு கேட்கும் அளவிற்கு கட்ஜீ அப்படி என்ன இல்லாத ஒன்றை கூறிவிட்டார்? அவரது கருத்துகளில் என்ன தவறு இருக்கிறது?
சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், ‘இந்தியாவில் உள்ள ஊடகங்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. பத்திரிக்கைகள் உண்மைக்கு புறம்பான செய்திகளை திரித்து வெளியிடுகின்றன. பணம் வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட சிலருக்கு சாதகமான செய்திகளை வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. நம் நாட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்களான வறுமை, வேலைவாய்ப்பின்மை, சுகாதார, வீட்டு வசதியின்மை போன்ற அன்றாடப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் சினிமாக்காரரின் மனைவி கர்ப்பமானது, அவருக்கு இரட்டை குழந்தை பிறக்குமா? என்பன போன்ற செய்திகளுக்கே முக்கியத்துவம் தந்து எழுதுகிறார்கள். பத்திரிக்கைகள் பொது விஷயங்களுக்கும், அன்றாடப் பிரச்சனைகளுக்கும் வெறும் 10 சதவீதமே இடம் ஒதுக்குகின்றன. ஊடகத்தின் மீதி 90 சதவீத கவனமும் சினிமாக்காரர்களின் வாழ்க்கை, பாப் இசை, பேஷன், கிரிக்கெட் மற்றும் ஜோதிடத்தின் மீதே இருக்கின்றதுஎன்று அவர் மனம் நொந்துள்ளார். மேலும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் மற்றும் சீக்கியர் என யாராக இருந்தாலும் அவர்களில் 99 சதவிகிதத்தினர் நல்லவர்களே. ஆனால் எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள்தான் என்பதைப் போல கருத்தை விதைக்கும் செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் பொறுப்பற்ற போக்கு மாற வேண்டும். அச்சு மற்றும் தொலைக்காட்சித் துறையினர் தங்களை சுயபரிசோதனை செய்து குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு ஏன் பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்..? கட்ஜீ ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்..?
அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை மற்றும் மாத்திரைகளைப் பெறுவதிலும், பேருந்து மற்றும் இரயில் நிலையங்களில் முன்பதிவு செய்வதிலும், சொகுசுப் பேருந்து என்று சொல்லப்படும் மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்வதிலும், அரசு அலுவலகங்களில் சான்றிதழ்களைப் பெறுவதிலும், தங்களின் பிள்ளைகளுக்கு தரமான கல்வியைத் தருவதிலும், படிப்பிற்கேற்ற வேலையைப் பெறுவதிலும், நாளுக்கு நாள் எகிறிவரும் விலையேற்றங்களை சமாளிப்பதிலும், மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் அன்றாடப் பணிகளை மேற்கொள்வதிலும் மக்கள் தினமும் கணக்கில்லா பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர். அவர்களில் சிலர் தங்களின் பிரச்சனைகளையும், உள்ளக் குமுறல்களையும் எழுதி வார இதழ்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுப்புகின்றனர். பத்திரிக்கைகளும் அவர்களின் கடிதங்களை கட்டம் கட்டிப் போட்டு பிரசுரித்துவிடுகிறது. சிறந்த கடிதத்திற்கு சன்மானமும் கொடுத்து விடுகிறது. அத்துடன் பத்திரிக்கைகளின் கடமை முடிந்து விட்டதா? ஆக்கப் பூர்வமாக ஏதாவது செய்து மக்களின் துயர் துடைக்க வேண்டிய கடமை பத்திரிக்கைகளுக்குக் கிடையதா? மக்களின் துயரங்களை பற்றி தங்களது பத்திரிக்கைகளில் தவறாது எழுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராட வேண்டியதன் அவசியத்தை பத்திரிக்கைகள் ஏன் உணருவதில்லை.
மக்களுக்கு நாட்டு நடப்பைப் பற்றியும், நாட்டில் நடக்கும் குற்றங்களைப் பற்றியும் ஏதும் தெரியாது. தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும்தான் செய்திகளை வெளியிட்டு மக்களிடம் அவற்றையெல்லாம் கொண்டு செல்கின்றன. ஒரு குறிப்பிட்ட வழக்கோ, நிகழ்வோ எந்த நிலையில் இருக்கிறது என்பதை மக்கள் மீடியாக்களின் மூலமாகத்தான் தெரிந்து கொள்கிறார்கள். ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி தினமும் பத்திரிக்கைகளும், ஊடகங்களும் செய்தி வெளியிடுகின்றன. வேறு ஏதாவது புதிய சூடான செய்தி கிடைத்துவிட்டால் ஏற்கனவே தொடர்ந்து வெளியிட்டு வந்த செய்திகளை நிறுத்திவிட்டு புதிய செய்திக்கு முக்கியத்துவம் தந்துவிடுகிறார்கள்.
ஒரு சமயத்தில் எந்தப் பத்திரி க்கையைப் பார்த்தாலும் நித்யானந்தாவைப் பற்றிய செய்தியே இடம் பெற்றிருக்கும். 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் பற்றிய வழக்கு ஆரம்பமானதும் அனைத்து பத்திரிக்கைகளும் அவ்வழக்கைப் பற்றியே எழுத ஆரம்பித்தன. பத்மநாத சுவாமி கோவில் பொக்கிஷங்களைப் பற்றிய செய்திகள் சில வாரங்களுக்கு சூடு பறந்தன. லோக்பால் மசோதாவைப் பற்றி எல்லா பத்திரிக்கைகளும் பக்கம் பக்கமாக எழுதி அன்னா ஹசாரேவிற்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்றுத் தந்தது மீடியாக்களே. தற்போது ஜெயலலிதா, சசிகலா பிரிவைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நாளை வேறு ஏதேனும் சூடான செய்தி கிடைத்தால் இந்த விஷயமும் கிடப்பில் போடப்படும் என்பது மட்டும் உறுதி. ஒரு வழக்கு முடிந்து தீர்ப்பளிக்கும் வரை பத்திரிக்கைகள் தெரடர்ந்து செய்தி வெளியிட்டு மக்களிடம் கொண்டு சென்றால் நிச்சயம் மக்களின் ஆதரவோடு நல்ல தீர்ப்பு வரும். ஒரு காலத்தில் நாட்டை உலுக்கிய சம்பவங்களும், வழக்குகளும் இன்று நீர்த்துப் போனதற்கு பத்திரிக்கைகளையும் காரணம் சொல்லலாம். சூடான செய்திகளை வெளியிட்டு விற்பனையை அதிகரிப்பது மட்டும்தான் பத்திரிக்கைகளின் லட்சியமாக இருக்குமா? பத்திரிக்கைகளுக்கும் நாட்டின் முன்னேற்றத்திலும், மக்களின் நலனிலும் அக்கறை கிடையாதா?
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை, எத்தனை மீடியாக்கள் இந்துக்கள் புனிதமாகக் கருதும் கங்கை நதி மாசுபடுவதைத் தடுக்க 115 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த ஹரித்வாரைச் சார்ந்த சுவாமி நிகாமனானந்தாவிற்கு கொடுத்தன? மீடியாக்களின் பார்வை அந்தத் துறவியின் மீதும் விழிந்திருந்தால் மக்களின் ஆதரவு அவருக்கும் பெருகி ஒரு புனித நதி மாசுபடுவதைத் தடுத்திருக்கலாம், அவரது உயிரையும் காப்பாற்றியிருக்கலாம்.. அதைச் செய்தார்களா மீடியாக்காரர்கள்..?

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் மீடியாக்களின் செயல்பாடுகளை சொல்லிமாளாது. திரைப்படங்களில் தீவிரவாதிகளாக காட்டப்படுபவர்களுக்கு தாடியும், தொப்பியும் அணிவித்து இஸ்லாமிய பெயரையும் சூட்டி காட்டுவதால் பாமர மக்களிடமும் தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள்தான் என்ற எதிர்மறையான எண்ணம் விதைக்கப்படுகிறது.
ஹைதராபாத் மக்கா மசூதி, அஜ்மீர் தர்ஹா, கான்பூர், நாந்தேட், மாலேகான் போன்ற இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் முஸ்லிம்களே முதலில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு நடைபெற்ற விசாரணையில் முஸ்லிம்கள் குற்றவாளியல்ல என்பது நிரூபணமானது. மலேகான் குண்டு வெடிப்பில் புரோஹித் என்ற முன்னாள் இராணுவ அதிகாரியும், சாத்வி பிரக்யா என்னும் பெண் சாமியாருமே குற்றவாளிகளாக கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர். எத்தனை பத்திரிக்கைகள் இவர்களைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதியது..? ஹைதராபாத் மக்கா மசூதி, அஜ்மீர் தர்ஹா போன்ற இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறி அப்ரூவராக மாறிய சுவாமி அசிமானந்தாவைப் பற்றி செய்தியும், அவரின் புகைப்படமும் எத்தனை தமிழ் நாளிதழிகளில் தலைப்புச் செய்தியாக வெளி வந்தன..?
தீவிரவாதி என்ற சொற்பிரயோகம் இஸ்லாமியர்களை மட்டும் குறிப்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டது போலும். இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை எந்த பத்திரிக்கையாவதுதீவிரவாதி ராஜபக்சேஎன்று எழுதியதா? சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் முஸ்லிம்களைக் கூட தீவிரவாதிகள் என்று குறிப்பிடும் பத்திரிக்கைகள் குண்டுவெடிப்பில் தனக்கு தொடர்பு உண்டு என்று தன் வாயாலேயே கூறிய சுவாமி அசிமானந்தாவை தீவிரவாதி என்று பத்திரிக்கைகள் குறிப்பிடாதது ஏன்? மற்றவர்கள் ஏதாவது தவறு செய்தால் இந்து தீவிரவாதி என்றோ, கிறிஸ்தவ தீவிரவாதி என்றோ எந்தப் பத்திரிக்கையும் குறிப்பிடுவதில்லை. எந்த ஒரு மதமும் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை. அப்படியிருக்க இஸ்லாமையும், தீவிரவாதத்தையும் தொடர்புபடுத்தி பத்திரிக்கைகள் எழுதுவது ஏன் என்பது அந்த பத்திரிக்கையாளர்களுக்கே வெளிச்சம்..இந்தியாவின் நான்கு தூண்களில் முதலாம் தூணாகிய அரசு அதிகாரிகளை எடுத்துக் கொள்வோம். அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் ஒரு சிறு வேலையாவது ஆகிறதா? முன்பதிவிற்காக பேருந்து அல்லது இரயில் நிலையத்திற்குச் சென்று பயணிகள் ஏதாவது ஒரு சந்தேகம் கேட்டால் எத்தனை பேர் பொறுமையாக எறிந்து விழாமல் பதில் சொல்கின்றனர்? அதே ஒரு தனியார் அலைபேசி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டால் அவர்கள் எத்தனை கனிவாகப் பேசுகின்றனர். அவர்களின் பேச்சுக்கும், இவர்களின் பேச்சுக்கும் மலையளவு வித்தியாசத்தைக் காணலாம். இரண்டாவது தூணாகிய சட்டம் இயற்றும் மக்கள் பிரதிநிதிகளை எடுத்துக் கொண்டால் அவர்களின் செயல்பாடுகளும் மக்களின் நலனுக்கு விரோதமாகவே இருக்கிறது. ஆட்சி செய்வதற்கு போதுமான நிதி இல்லை என்றால் பேருந்து கட்டணத்திற்குப் பதிலாக சினிமா கட்டணத்தை ஏற்றலாம். பால் விலையேற்றத்திற்குப் பதிலாக மதுபானங்களின் விலையையேற்றலாம். ஏன் அடித்தட்டு மக்களை நோகடிக்க வேண்டும்? மூன்றாவது தூணாகிய நீதித் துறையை எடுத்துக் கொண்டால் அங்கும் நிலைமை மோசமாகிவிட்டது. ஒரு வழக்கில் ஒருவர் குற்றவாளியா இல்லையா என்று முடிவு செய்வதற்கே இருபது ஆண்டுகள் வரை தேவைப்படுகிறது. அங்கும் லஞ்சம் புகுந்து விட்டது வேதனையின் உச்சம். இந்தியாவின் நான்காவது தூண் என்று மார்தட்டிக் கொள்ளும் பத்திரிக்கைகளோ காசு வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடுவதிலும், தங்களுக்கு வேண்டிய கட்சிக்கு சாதகமான செய்திகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதிலும், நடுப்பக்கத்தை ஆபாச படங்களினால் அலங்கரிப்பதிலும், சூடான செய்திகள் மற்றும் கிசு கிசுக்களின் மூலம் விற்பனையை அதிகரிப்பதிலுமே முனைப்பு காட்டுகின்றனர். இப்படி இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் சிதைந்திருந்தால் நாம் நாடு எப்படி வல்லரசாகும்? நம் வல்லரசு கனவு என்றும் கனவாய்த்தான் இருக்கும்.
தொலைக்காட்சிகளில் சிறுவர்களை அரை, குறை ஆடைகளுடன் ஆபாச பாடல்களுக்கு ஜோடியாக ஆட வைப்பது போன்ற நிகழ்ச்சிகள் இளம் தலைமுறைகளை ஆரோக்கியமான கலாச்சாரத்தில் வளரவிடுமா? திரைப்படங்களுக்கு தணிக்கை இருப்பது போல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அவசியமாகிறது.
தவறு செய்யும் போது கண்டிக்க தொலைக்காட்சிகளையும், பத்திரிக்கைகளைப் போன்று பிரஸ் கவுன்சிலின் கீழ் இணைக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறும் மார்க்கண்டேய கட்ஜீ விற்பனைக்காகவும், பரபரப்புச் செய்திக்காகவும் உண்மையை திரித்து எழுதுவது குற்றமில்லையா? அவர்களை தண்டிப்பது யார்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
நியாயமான கேள்விதானே?
தனக்கு வேண்டிய ஒரு அரசியல் கட்சியின் லாபத்திற்காக வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவுதானே மதுரையில் மூன்று அப்பாவி பத்திரிக்கை ஊழியர்களின் உயிரைக் குடிக்க காரணமாக அமைந்தது. சாதாரண சினிமா கலைஞர்களைப் பற்றி பத்திரிக்கைகளில் படங்களும், செய்திகளும் வெளியாவதால்தானே இன்றைய இளைய சமூகம் நடிகர்களின் பின்னால் செல்கிறது.
இப்படி எத்தனையோ தவறுகளை பத்திரிக்கைகளும் செய்யவில்லையா..? நாட்டின் பிரதமரையும் லோக்பால் மசோதாவின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதை ஆதரிக்கும் மீடியாக்கள் தாங்களே தவறு செய்தாலும் கண்டிக்க எடுக்கப்படும் முயற்சிக்கு முட்டுக் கட்டை ஏற்படுத்துவது ஏன்?

நாட்டின் குடிமக்கள், இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், காவல் துறையினர், அரசு அலுவலர்கள் என எல்லோரும் நேர்மையாய், உண்மையாய் நடுநிலையாய் இல்லாவிட்டாலும் மீடியா, பத்திரிக்கைகள் மட்டும் யாரையும் சாரந்து இராது, நடுநிலையாய், நாட்டின் நலனையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இயங்கினாலே போதும் நாட்டில் எந்தத் தப்பும் நடக்காது, அனைவரும் குற்றம் செய்யப்பயப்படுவர், அனைத்தும் நல்லதாய் நடக்கும் என்பது மட்டும் திண்ணம்.
நன்றி: சமநிலைச் சமுதாயம் (ஜனவரி 2012)