ஹலோ நான்தான் மரம் பேசுகிறேன்...
தரணியிலே
நாங்களுமொரு
இறை படைப்பு
எங்கள் தேகம்
முழுவதும்
மானிட நலனுக்கே
அர்ப்பணிப்பு
மலையை அலங்கரிக்கும்
மலர்களும் நாங்கள்
மழையை பொழிய
வைக்கும்
காரணியும் நாங்கள்
பரந்து விரிந்து
நாங்கள்
காட்சியளிப்பதைப்
போன்றதுதான்
எங்கள் மனமும்
ஆம்,
நிழல்களை தேடி
எங்களை நாடி
வருவோர்களிடம்
நாங்கள் பாகுபாடு
பார்ப்பது இல்லை
எங்கள்
பிள்ளைக் கனிகளை
பறித்துச் செல்வதால்
நாங்கள்
கவலைப்படுவதும்
இல்லை
"ஞாபகச் சின்னம்"
என்ற பெயரிலே
எங்களைக் குடைந்து
வதைப்பதால்
நாங்கள்
கண் கலங்குவதும்
இல்லை
நீரின்றி நாங்கள்
வாடுவதைக் கண்டும்
பாராமுகமாக
செல்வோரைக் கண்டு
நாங்கள்
சினங் கொள்வதும்
இல்லை
மனிதா,
உயிர் வாயுவை
நான் உருவாக்கித்
தருகிறேன்
நீயோ
கரியமில வாயுவை
எனக்கு
காணிக்கையாக்குகிறாய்
பரவாயில்லை
அது எனது
நாட்டமாக இருக்கட்டும்
இது உனது
விருப்பமாக இருக்கட்டும்
"ஃபேஷன்" என்ற
பெயரிலே
பண்பாட்டை
கூறு போட்டு
விற்கும்
நாகரீகப் பெண்கள் அல்ல
நாங்கள்
ஆடைகளை
குறைத்துக் கொண்டே
போவதற்கு
மண்ணின்
மானம் காக்க
மானிட குலம்
காக்க
அன்று விதைக்கப்பட்ட
நாண வித்துக்கள்
நாங்கள்
இன்றைய ஒழுக்கத்தின்
விருட்சங்கள் நாங்கள்
அதனால்தான்
காலம் கடந்த
பிறகும்
உடைகளை
உறுதியாக்கிக் கொண்டே
வாழ்கிறோம்
மலைகளின்
ஆடைகளாகிய
எங்களை அகற்றி
மலையை
நிர்வாணப்படுத்திய
சாபம் உங்களையே
சாரும்
அதனால்தான்
ஓசோன் படலம்
உங்களை
சபித்துக்
கொண்டிருக்கிறது
உங்கள்
எதிர்கால வாழ்க்கையை
கேள்விக் குறியாக்கி
வருகிறது
உங்கள் சந்ததியினார்
வாழ வழியின்றி
நிராயுதபாணியாய்
நிற்கும் முன்னே
எங்களை காத்திடுங்கள்
தோழர்களே
நாங்கள்
வாழ்ந்தாலும்,
வீழ்ந்தாலும்
பயன் என்னவோ
உங்களுக்குத்தான்
எங்களைப்
பயன்படுத்துவதில்
ஒன்றும் தவறு
இல்லை
அது உங்கள்
ஜீவாதார உரிமை
ஆனால் எங்களை
அழிப்பதுதான்
கொடிய
கொலைக் குற்றம்
ஆகவே
எங்களைக்
காத்திடுங்கள்
உங்கள்
இனத்தைப் போற்றிப்
பாதுகாத்திடுங்கள்
இது
வேண்டுகோள்
அல்ல
காலத்தின்
கட்டளை...