Thursday, March 10, 2011

அப்பதான் கோபம் வரும்!

கணினிப் பயன்பாட்டியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், தமிழ் இலக்கியத்தின் மீதே தீராத காதல். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் பிறந்தது. கூடவே, கவிதைப் புத்தகங்கள் படிப்பதிலும் ஈடுபாடு வந்து, நிறைய கவிதைப் புத்தகங்களைப் படிக்கலானேன்.
நான் பதினொறாம் வகுப்பு படிக்கும் போது மு. மேத்தாவின் ‘ஊர்வலம்’ என்ற புத்தகத்தை வாங்கினேன். ஊரில் இருந்தவரை புத்தகங்கள் வாங்குவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. கல்லூரிப் படிப்புக்காக திருச்சி வந்த பின்பு வாரா வாரம் புத்தகக் கடைகளுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. வீண் செலவு ஏதும் செய்யாமல் புத்தகம் வாங்குவதிலேயே முதலீடு செய்தேன். அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வம்தான் மேலும் மேலும் பல அரிய புத்தகங்களைத் தேடி வாங்குவதற்கு உந்துதலாய் அமைந்தது.
சென்ற வருடம் முதன் முறையாக சென்னை புத்தகக் கண்காட்சிக்காகவே ஊரிலிருந்து வந்து நிறைய புத்தகங்களை அள்ளிச் சென்றேன். மாத ஊதியத்தில் ஒரு பகுதியை புத்தகங்கள் வாங்குவதற்காகவே ஒதுக்குவேன்.
கஷ்டப்பட்டு, அலைந்து திரிந்து, தேடித் தேடி வாங்கிய புத்தகங்களை வீட்டில் பார்க்கும் நண்பர்கள், “ம்...ம்... எடைக்குப் போட்டால் நல்ல காசு கிடைக்கும்” என்று கிண்டல் செய்யும்போதுதான், கோபம் சுள்ளென வருகிறது.

நன்றி: கல்கி (16-01-2011)

0 comments: