Saturday, March 12, 2011

சொகுசான அவஸ்தை!

மாநகராட்சிகளிலும் சென்னையிலும் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்ட சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கனடா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வாட்டும் குளிரைச் சமாளிக்கவே முழுவதும் மூடப்பட்ட வாகனங்களையும் பேருந்துகளையும் பயன்படுத்துகிறார்கள். வெயில் வாட்டி வதைக்கும் சென்னை போன்ற இடங்களில் இத்தகைய தானியங்கிக் கதவுகள் பொருத்திய பேருந்துகள் தேவைதானா? படியில் தொங்குவதைத் தடுப்பதற்காகவே தானியங்கிக் கதவுகள் பொருத்துவதாகக் காரணம் சொல்கிறார்கள். உள்ளே இடம் இருக்கும்போது எவரும் தொங்கிக்கொண்டு வருவதில்லை. கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தினாலும், பேருந்தினுள்ளே இடம் இல்லாததாலும் உயிரைப் பணயம் வைத்துப் படியில் தொங்கிக்கொண்டு வரும் பரிதாப நிலைக்குப் பயணிகள் தள்ளப்படுகிறார்கள். படியில் பயணம் செய்வதைத் தடுக்க, நெரிலைத் தவிர்க்க அதிகமான பேருந்துகளை இயக்குவதே சரியான வழி. அதை விடுத்து பேருந்துகளுக்குக் கதவிட்டு அடைத்துச் செல்வதல்ல. பயணிகள் பேருந்தில் ஏறி உள்ளே செல்வதற்குள்ளாகவே தானியங்கிக் கதவுகள் மூடப்படுவதால் சில விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. (சில பேருந்துகளில் தானியங்கிக் கதவுகள் இயங்குவதே இல்லை என்பது வேறு விஷயம்.)கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கதவுகள் மூடப்பட்ட காரணத்தால் வியர்த்துக் கொட்டிப் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இது போன்ற நேரங்களில் மேற்கூரையில் உள்ள ஜன்னலைத் திறக்க முற்பட்டால் காற்றில் பறந்திடும் நிலையில் உடைந்து கிடக்கிறது.முன்பு பல்லவன் பெயரில் இயக்கப்பட்ட, மாநகரப் பேருந்துகளுக்கு இணையான உறுதியையும், உழைப்பையும் இன்றைய சொகுசுப் பேருந்துகள் தருவதில்லை. சொகுசுப் பேருந்துகளில் பிளாஸ்டிக் இருக்கைகள் உறுதியற்று காணப்படுவதால் ஒரு வருடத்துக்குள்ளாகவே பழுதடைந்து விடுகின்றன.அதிக பணத்தையும் கொடுத்துவிட்டு சொகுசு என்று சொல்லக்கூடிய பேருந்துகளில் பயணிகள் அனுபவிக்கும் அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

நன்றி: கல்கி (13-03-2011)

0 comments: