நன்றிக் கடிதம்
கல்வி சேவையாற்றும் எத்தனையோ நல்ல உள்ளங்களிடமிருந்து கல்வி உதவித் தொகையைப் பெறுகிறோம். உதவித் தொகையைப் பெற்ற பின்பு நன்றி தெரிவிப்பது மிகவும் அவசியமான ஒன்று. உதவித் தொகை வழங்கியவர்களின் உயர்ந்த பண்பிற்கும், இரக்க குணத்திற்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதுவது அவர்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல் யாருக்கு உதவி செய்தோம் என்பதைப் பற்றியும் அவர்கள் சிறிது அறிந்து கொள்ள ஏதுவாக அமையும். அத்தோடு மற்ற மாணவர்களுக்கும் உதவி புரிய தூண்டுதலாக இருக்கும். உதவித் தொகை பெற்றவர் தனது கடந்த கால சாதனைகளையும், எதிர்கால இலக்கையும் விளக்கி உதவித் தொகை வழங்கியவருக்கு கடிதம் எழுதினால் மேற்கொண்டு உதவிகளைப் பெறவும், ஆரோக்கியமான தொடர்பினை வளர்த்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும்.
நன்றி தெரிவித்து எழுதப்படும் கடிதம் சுருக்கமாகவும் அதே நேரத்தில் விபரமாகவும் அமைதல் வேண்டும். உதவித் தொகை பெற்ற மாணவரின் தனிப்பட்ட பண்பினையும், திறமையையும் பிரதிபலிக்கும் விதமாக கடிதம் எழுதப்பட வேண்டும். கடிதம் எழுதப்படும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கு பார்க்கலாம்.
- கடிதத்தை தாய் மொழியில் எழுதுவதே நலம். உதவித் தொகை வழங்கியவர் வேறு மாநிலத்திலோ அல்லது வெளிநாட்டிலோ இருந்தால் ஆங்கிலத்தில் எழுதலாம்.
- நன்றிக் கடிதத்தை கையால் எழுதி அனுப்புதல் வேண்டும். கையெழுத்து அழகாக இல்லாத பட்சத்தில் கம்ப்யூட்டரில் பிரிண்ட் எடுத்து அனுப்பலாம். ஈ.மெயிலில் நன்றி தெரிவிப்பதை தவிர்ப்பது நல்லது.
- கடிதம் எழுதுவதற்கு நல்ல தரமான காகிதத்தை உபயோகித்தல் வேண்டும். கடிதத்தை ஓரிரு பக்கங்களுக்குள் முடித்தல் வேண்டும்
- உதவித் தொகையைப் பெற்ற உடனேயே கடிதத்தை அனுப்புதல் வேண்டும். காலம் தாழ்த்துதல் கூடாது.
- உதவித் தொகை வழங்கியவரின் பெயரை கடிதத்தில் குறிப்பிடும் போது திரு., திருமதி., பேராசிரியர் அல்லது முனைவர் என்று பொருத்தமான வார்த்தைகளை பெயருக்கு முன்னால் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
- நன்றி தெரிவித்து எழுதப்படும் கடிதத்தின் முதல் பத்தியில் உதவித் தொகை வழங்கியவரின் உயர்ந்த பண்பிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். உதவித் தொகையின் பெயரை கடிதத்தில் தவறாது குறிப்பிடுதல் வேண்டும்.
- இரண்டாவது பத்தியில் உதவித் தொகை பெற்றவரின் குடும்ப சூழல், படிப்பு, சாதனைகள் மற்றும் விளையாட்டு போன்ற இதர துறைகளில் உள்ள ஆர்வம் போன்றவற்றை உதவித் தொகை வழங்கியவர் தெரிந்து கொள்ளும் வண்ணம் அனைத்து விவரங்களையும் குறிப்பிடுதல் வேண்டும். எதிர்கால லட்சியங்களைப் பற்றியும், லட்சியங்களை எட்டுவதற்கு பெற்ற உதவித் தொகை எப்படியெல்லாம் உதவப் போகிறது என்பதைப் பற்றியும் கூறலாம்.
- உதவித் தொகை பெற விண்ணப்பித்திருந்த போது ஏதேனும் நேர்முகத் தேர்வுகளை சந்தித்திருந்தால் அத்தேர்வில் கற்றுக் கொண்ட விஷயங்களையும், அனுபவத்தையும் தெரிவிக்க வேண்டும்.
- கடைசிப் பத்தியில் உதவித் தொகை வழங்கியவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்து அவர்கள் அளித்த உதவித் தொகைக்கு நல்ல பலன் இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக கடிதத்தை முடிக்க வேண்டும்.
- கடிதம் எழுதி முடித்த பின்பு எழுத்துப் பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் சரிபார்த்தல் வேண்டும்.


0 comments:
Post a Comment