பயணத்தில் ஒரு பணயம்
ஒன்றரை
மணி நேரம்
கால் கடுக்க
காத்து நின்றேன்
பேருந்து நிலையத்தில்...
எந்த வித
ஆராவாரமுமின்றி
அலுங்கி, குலுங்கி
தன்னந் தனியே
தனித்து வந்தது
அரசுப் பேருந்து
ஒன்று...
அடித்துப் பிடித்து
பேருந்தில் ஏறி
ஜன்னலோர இருக்கையை
பிடித்து அமர்ந்தேன்
ஏதோ ஒரு
கோட்டையை பிடித்தது
போன்றதொரு
சந்தோஷத்தில்...
வழிநெடுங்கிலும்
வல்லோனின்
படைப்புகளைப் பார்த்து
பரவசமடைந்த படியே
பயணித்தேன்...
சீறிப் பாய்ந்த
பேருந்தின் வேகம்
திடீரென தளர்வு
கண்டது...
புறவழிப் பாதையில்
ஒரு "டிராபிக் ஜாம்"
ஜன்னலின் வழியே
தலையை நீட்டி
எட்டிப் பார்த்தேன்
என்னவோ?
என்ற புரியாத
பார்வையோடு...
ஆமை வேகத்தில்
நகர்ந்து சென்றது
பேருந்துகள்
ஒவ்வொன்றும்
வரிசையாக...
பேருந்து முன்னே
செல்லச் செல்ல
செவியை
வந்தடைந்த
கூச்சல்களும்,
கூப்பாடுகளும்
இதயத்தைப்
பதற வைத்தன...
கண்களைக்
காயப்படுத்தியது
மரத்தின் மீது
பேருந்து மோதிய
அந்த
கோர காட்சி...
என்னையும்
அறியாது ஏனோ
என் கண்களில்
கண்ணீர் வெள்ளம்...?
இதயத்தில்
துடிப்பு
அதிகமானது
நல்ல படியாக
பயணம் அமைய
வேண்டுமென்று
இறைவனைப்
பிரார்த்தித்தது
என் மனம்...
உயிரை கையில்
பிடித்த படியே
பயணித்தேன்
பயத்தின்
துணையோடு...
உயிரை
பணயம் வைத்து
செய்யும் பயணம்
"விட்டில் பூச்சி
விளக்கைச் சுற்றி
வரும் கதை"க்கு
ஒப்பாகும்...

0 comments:
Post a Comment