Saturday, October 24, 2009

தொலைபேசியுடன் ஒரு பேட்டி

உங்களைப் பற்றி...?
அலெக்ஸாண்டர் கிரகாம்பெல்
என்பவரால்
இப்புவிக்கு
அறிமுகப்படுத்தப்பட்டோம்

விஞ்ஞானத்தின்
வியத்தகு வளர்ச்சியால்
விருட்சம் போல்
அகிலமெங்கும்
வியாப்பித்தோம்...


பெருமையாக கருதுவது...?
கடல் கடந்து
வாழ்வோரையும்
கண நேரப் பொழுதில்
இணைக்கும்
உறவுப் பாலமாக
செயல்படுவதே
எங்களுக்குரிய பெருமை...


ஆழ்ந்த வருத்தம் அடைந்ததுண்டா...?
ஆம்,
மாந்தர்களை மரணம்
சிறைப்பிடிக்கும் போது
உற்றாருக்கு
தகவலை தெரிவிக்க
எங்களைப்
பயன்படுத்துகிறார்கள்

மரணச் செய்தி
செவியை எட்டியவுடன்
கண்கள் வடிக்கும்
கண்ணீரால்
எங்களுக்குள்
ஒரு குற்ற உணர்வு
பிறக்கிறது

இவன் கண்ணீருக்கு
நாமும் ஒரு
காரணமாகி விட்டோமே
என்று...
நற்செய்தி கூறவும் உங்களைத்தானே பயன்படுத்துகிறோம்...?
நற்செய்தியின்
சந்தோஷத்தை விட
துயரச் செய்தியின்
சங்கடமே
வீரியமானது...

விட்டுத் தள்ளுங்கள் உலக வாழ்க்கையில் இதெல்லாம் சர்வ சாதாரணம்...
வாழ்ந்து கெட்ட
உங்கள் வர்க்கத்திற்கு
வேண்டுமானால்
சாதாரணமாய் தோன்றலாம்

எங்களால்
இதையெல்லாம்
ஜீரணிக்க முடியாது

ஆ... முக்கியமானதொன்று...?
காதலர்களைப் பற்றித் தானே...

ஐயோ, எப்படி இப்படி சரியாக சொன்னீர்கள்...?
தெரியுமே...
மானிடர்கள்
அனைவரும்
எங்களால்
பயனுற்றாலும்
எங்களைப் போற்றி
நன்றியுரைக்கும்
ஆத்மாக்கள்
அவர்கள் தானே...

அது சரி, எல்லையின்றி உங்களைப் பயன்படுத்தி கட்டணத்தையல்லவா இமயத்திற்கு கொண்டு செல்கிறார்கள்...?
ஜாதி, மதம், இனம், நிறம்
பாகுபாடு பார்க்காத
காதல் கட்டணத்தையா
பார்க்கப் போகிறது...?

பரவாயில்லை புத்திசாலித்தனமாகத்தான் பதில் சொல்கிறீர்கள்...
நிச்சயாக...
நாங்கள் என்ன
சாதாரணமானவர்களா...?

உயிரற்றுக் காணப்பட்டாலும்
மனிதர்களோடு
ஐக்கியமானவர்கள் அல்லவா
நாங்கள்......

நன்றி: சங்கமம் (2006)

0 comments: