Saturday, May 21, 2011

ஓடி விளையாடு பாப்பா

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், மன வளர்ச்சியிலும் விளையாட்டிற்கு முக்கியப் பங்கு உண்டு. குழந்தைகளும் விளையாட்டில் ஆர்வமும், ஈடுபாடும் காட்டுகின்றனர். ஆனால் இன்றைய நவீன உலகில் குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடுவதற்கு மாறாக தொலைக்காட்சிப் பெட்டியிலும், கணினியிலும் விளையாடுகின்றனர். அனுதினமும் கையில் ஜாய் ஸ்டிக்கை ஏந்திக் கொண்டு வீடியோ கேம்களில் குழந்தைகள் மூழ்குவதால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, இத்தகைய வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் அபாயமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனாவில் சிறுவன் ஒருவன் எந்நேரமும் இத்தகைய வீடியோ கேம் விளையாட்டில் மூழ்கி மன அழுத்ததிற்கு உள்ளாகி இரத்தக் குழாய்கள் வெடித்து இறந்த செய்தி நம்மை மேலும் பதற வைக்கிறது. ஓடி, ஆடி விளையாடும் விளையாட்டுகள் மட்டுமே ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். ஆகவே குழந்தைகள் கணினி விளையாட்டிற்கு அடிமையாகுவதை கட்டுப்படுத்தி இத்தகைய விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது. 'ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா' என்ற பாரதியின் வரிகளை குழந்தைகளுக்கு நினைவுபடுத்துவோமாக...

0 comments: