வாழ்த்து அட்டைகள்
பிறந்த நாள், திருமண நாள், புது வருட பிறப்பு மற்றும் இதர பண்டிகைகளக்கு வாழ்த்து அட்டைகள் வழங்கும் பழக்கம் பரவலாய் காணப்படும் ஒன்று. இதனால் எந்த பயனும் கிடையாது. பணம் சம்பாதிப்பதற்காக மேலை நாடுகள் கண்டுபிடித்த ஒரு ஆடம்பர பழக்கமேயன்றி வேறில்லை. இது போன்று வாழ்த்து அட்டைகளுக்கு பதிலாக ஏதாவது புத்தகங்களை பரிசளிக்கலாமே. ஓரளவிற்கு வேலைப்பாடுடைய வாழ்த்து அட்டைகளே கிட்டத்தட்ட நாற்பது ரூபாய்க்கும் அதிகமாக இருக்கின்றன. ஆனால் இந்த விலைகளிலேயே எவ்வளவோ தரமான, பயனுள்ள புத்தகங்கள் கிடைக்கின்றன. இப்படி புத்கங்களை அன்பளிப்பு செய்வதால் தமது அன்பையும், வாழ்த்தையும் வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கும் அத்துடன் கொடுப்பவர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். சிலர் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இல்லாதவராக இருக்கலாம். ஆனால் ஏதாவது ஒரு வகை புத்தகம் அவர்களுக்கு உதவுவதாகவே இருக்கும். அவற்றை வாங்கிக் கொடுக்கலாம். உதாரணமாக, படிக்கும் மாணவர்களாக இருந்தால் அவர்கள் பாடத்தோடு தொடர்புடைய புத்தகத்தை அன்பளிப்பு செய்யலாம். இல்லத்தரசிகளாக இருந்தால் அவர்களுக்கு சமையல் குறிப்பு, மருத்துவ குறிப்புகள் நலம் சம்மந்தமான புத்தகங்களை தரலாம். ஆன்மீகத்தில் பற்று உள்ளவர்களுக்கு ஆன்மீகம் தொடர்பான புத்தகங்களை பரிசளிக்கலாம். வாழ்த்து அட்டைகள் மட்டுமல்லாது திருமணம் முதலான சுப காரியங்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு கூட புத்தகங்களையே தேர்வு செய்வது சிறந்தது. அவ்வாறு கொடுக்கப்படும் புத்தகங்களில் உள்ள நல்ல கருத்துக்கள் அவர்கள் வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றத்தை உண்டாக்கினால் அதன் பிரதிபலன் நம்மையும் சாரும்.


0 comments:
Post a Comment