புறக்கணிக்கப்படும் மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முக்கியமானதும் பழம் பெருமை வாய்ந்ததுமாகும். வற்றாத ஜீவ நதியாம் தாமிரபரணி; பாயும் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள விவசாயப் பகுதி, இயற்கை வளம் செறிந்த பகுதி, தென்னக ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையைக் கொண்ட மாநகரம், தமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்று என பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ள திருநெல்வேலி மாவட்டம் அரசியல் கட்சிகளால் காலம் காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இயற்கை வளமும், படிப்பறிவும், நீர் வளமும், மனித வளமும் செறிந்து காணப்பட்டாலும் குறிப்பிடும் படியான முன்னேற்றமோ, தொழிற்சாலைகளோ, வேலை வாய்ப்புகளோ இங்கு இல்லை.
கல்வியறிவைப் பெறுவதற்கு ஏதுவாக கல்வி நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் நிறையவே இருக்கின்றன. இதனை நல்ல முறையில் பயன்படுத்தி வருடா வருடம் பள்ளி பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் சாதனை புரிபவர்களின் பட்டியலில் திருநெல்வேலி மாவட்ட மாணவர்களும் தவறாது இடம் பிடித்துவிடுகின்றனர். ஆனால், அதிகமான பட்டதாரிகளைக் கொண்ட இப்பகுதியில் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளைப் பெற முடியாத சூழல் நிலவுவதால் படித்த இளைஞர்கள் அனைவரும் சென்னை போன்ற பெருநகரங்களை நோக்கியே படையெடுக்க வேண்டியுள்ளது. தமிழகத்தின் அந்த மூலையான திருநெல்வேலி சுற்று வட்டாரத்திலிருந்து இந்த மூலையான சென்னைக்கு வந்து பணிபுரிவதில் பல நடைமுறை சிக்கல்களை குறிப்பாக பெண்கள் சந்திக்க நேரிடுகிறது.
கங்கை கொண்டான் தொழில் நுட்பப் பூங்கா மற்றம் நாங்கு நேரி சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டங்களால் இம்மாவட்ட பட்டதாரிகளுக்கு குறிப்பிடும்படியான பயனோ, வேலைவாய்ப்போ கிடைக்கவில்லை என்பதே உண்மை. அரசு இத்திட்டங்களில் போதிய கவனம் செலுத்தி பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் வருவதற்கு தேவையான அடிப்படை வசதிகளையும், சலுகைகளையும் வழங்க முற்பட்டால் இப்பகுதி மக்கள் மிகுந்த பயனடைவார்கள். திருநெல்வேலி போன்ற தென்மாவட்டங்களுக்கு இரயில் போக்குவரத்து குறைவாகவே உள்ளன. இக்குறையை நிவர்த்தி செய்வது, வாகைகுளம் விமான நிலையத்தை தரம் உயர்த்துவது என்பன போன்ற போக்குவரத்து வசதிகளையும் மேம்படுத்தினால் தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் இப்பகுதியில் பெருக ஏதுவாக அமையும். இது தவிர இலுமனைட், பாக்சைட் போன்ற தாதுப் பொருட்கள் இப்பகுதியில் பெருமளவில் கிடைக்கின்றன. இதனைப் பயன்படுத்தவும் இங்கு தொழிற்சாலைகளை கொண்டு வரவும் அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புளியங்குடி நகராட்சியை 'லெமன் சிட்டி' என்றும் அழைப்பர். காரணம், இங்கு அமோகமாக விளையும் எலுமிச்சையே. புளியங்குடி மற்றும் இதன் சுற்று வட்டார கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை பயிரிடப்பட்டு ஆண்டு முழுவதும் மகசூல் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்ய்ப்படுகின்றன. புளியங்குடியில் எலுமிச்சைக்கென்றே மிகப்பெரிய தினசரி சந்தை ஒன்று இயங்குகின்றது, இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான மூட்டை எலுமிச்சை திருவனந்தபுரம், தூத்துக்குடி, கோயம்புத்தூர், சென்னை போன்ற ஊர்களுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மருந்து, குளிர்பானங்கள், ஷாம்பு போன்றவைகள் தயாரிப்பில் முக்கிய மூலப் பொருளாக விளங்கும் எலுமி;ச்சையை பயன்படுத்தி தொழில் தொடங்கவும், இப்பகுதி இளைஞர்களே நேரடியாக வெளிநாடுகளுக்கு எலுமிச்சையை ஏற்றமதி செய்யும் பொருட்டு சலுகைகளையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தர அரசு முன் வர வேண்டும்.


0 comments:
Post a Comment