Saturday, May 21, 2011

வேண்டாம் கணினி மோகம்

வாழ்வை பண்படுத்திக் கொள்ளவும், நெறிப்படுத்திக் கொள்ளவும் பயன்பட வேண்டிய கல்வி இன்று பொருள் ஈட்ட உதவும் ஒரு கருவியாக மட்மே பயன்படுத்தப்படும் காரணத்தால் கணினி சார்ந்த கல்வி மக்களிடையே ஒரு வித்தியாசமான போதையை உருவாக்கியுள்ளது. கம்ப்யூட்டர் படித்தால் பல ஆயிரங்களிலும், லட்சங்களிலும் ஊதியம் பெறலாம் என்ற மனோபாவமும், எண்ணமும் அனைத்து தரப்பு மக்களிடமும் பரவலாக காணப்படுகின்றது. நடைமுறையை சற்று ஆராய்ந்து பார்த்தோமனால் மக்களின் எண்ணத்திற்கு எதிர்மறையான பல உண்மைகளையே கண்டறிய முடிகின்றது.
தகவல் தொழில் நுட்பத் துறையைப் பொறுத்த வரையில் அத்துறையில் நிரந்தரமான வேலைக்கு எந்தவிதமான உத்திரவாதமும் கிடையாது. இந்தியாவில் இத்துறையில் வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிடமிருந்துதான் பெறப்படுகிறது. ஆர்டர் கிடைத்தால் தேவையான ஆட்களை எடுத்து வேலை வாங்கிக் கொள்வர். ஆர்டர் முடிந்ததும் வேலை இல்லை என்று அனுப்பி விடுவர். இந்தியா ஆர்டர் பெறும் வெளிநாடுகளின் அதிபர்கள் திடீரென ஏதாவது புதிய பொருளாதாரக் கொள்கையை கொண்டு வந்து நம்நாட்டு சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு ஆர்டர் தர மறுத்தால் நம்நாட்டின் சாப்ட்வேர் துறை ஆட்டம் கண்டுவிடுகிறது. இதுதான் சாப்ட்வேர் கம்பெனிகளின் யதார்த்த நிலை.
மேலும் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கு பெரும்பாலும் வேலை நேரம் நிலையானதாக அன்றி பகல் மற்றும் இரவுகளில் சுழற்சி முறையில் அமைகிறது. சிலரோ இரவு நேரத்தில் மட்டுமே வேலை செய்யும் நிலையில் உள்ளனர். பகலில் உழைக்க வேண்டும், இரவில் உறங்க வேண்டும் என்பதே இயற்கையின் நியதி. இதற்கு மாற்றமாக செயல்படும் போது பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. இத்தகைய முரண்பட்ட செயல்பாடுகளாலும், வேலைப் பளுவின் காரணமாகவும் தகவல் தொழில் நுட்பத் துறையை சேர்ந்தவர்கள் மனஅழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கு ஆளாகும் துயரமும் நிலவுகிறது.
பொறியியல் மட்டுமின்றி இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளிலும் பலர் கணினி தொடர்பான படிப்புகளை படிப்பதால் வேலை பெறுவதில் கடும்போட்டி நிலவுகிறது. சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது பல நிலைகளிலும் வடிகட்டிய பின்னரே தேர்வு செய்கின்றனர். மிகச் சிலரே படிப்பிற்கேற்ற வேலையில் உள்ளனர். மற்றவர்கள் கால் சென்டர், டேட்டா எண்ட்ரி போன்ற படித்த படிப்பிற்கு சம்மந்தமில்லாமலேயே பணிபுரிகின்றனர். மிகக் குறைந்த விழுக்காட்டினரே தகவல் தொழில் நுட்பத் துறையில் சரியான வேலையில் அமர்ந்து அதிகமாக சம்பாதிக்கின்றனர். இந்நிலை நாளை கூட மாறலாம். இக்குறைந்த விழுக்காட்டினரே மக்களின் கண்களுக்குத் தெரிகின்றனர். அவர்களைக் கண்டு ஒரு மாய வலையில் சிக்கி தங்கள் பிள்ளைகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாகவும், விருப்பத்தை கேட்காமலேயும் கணினி சார்ந்த படிப்புகளில் சேர்த்து விடுகின்றனர்.
படிப்புகளில் உயர்ந்த படிப்பு தாழ்ந்த படிப்பு என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எந்தப் படிப்பபைப் படித்தாலும் நன்கு படித்து புலமை பெற்றிருந்தால் வேலையும், நல்ல ஊதியமும் நிச்சயம். நாம் அறிந்திடாத எத்தனையோ புதிய படிப்புகள் உள்ளன. அப்படிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால் மிகக் குறைவானவர்களே அத்தகைய படிப்பகளை தேர்வு செய்கின்றனர். இப்படிப்புகளை படிப்பவர்கள் குறைவாக எண்ணிக்கையிலேயே இருப்பதால் வேலைகளை மிகுந்த போட்டியின்றி எளிதில் பெற்று விடலாம். அத்தகைய புதுமையான படிப்புகளை படிக்க மாணவர்கள் முன்வர வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் திறமையை கண்டறிந்து அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். அறிந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் இத்தகைய படிப்பபுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த முன்வர வேண்டும். அப்படி செய்தால் வரும் தலைமுறையினரைச் சுற்றிலும் ஒரு ஒளி வட்டம் தெரியும், அவர்கள் வாழ்வும் பிரகாசமாக இருக்கும்.

0 comments: